சுற்றுச்சூழலைக் காப்போம்! சுகமாய் வாழ்வோம்!
அறிவியல் யுகத்தில் காலச்சக்கரம் கடுமையாகச் சுழன்றுக் கொண்டிருக்கிறது, உலகம் உள்ளங்கையில் சுருங்கியிருக்கிறது. கூடவே நம் சூழலும் பாலாகியிருக்கிறது. நீர், நிலம், காற்று என அனைத்தையும் மாசடையச் செய்திருக்கிற பெருமை நம்மையே சாரும். உலகம் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. கமழி அடுக்கு(ஓசோன் மண்டலம்)மெல்லியதாகிப் போகியிருக்கிறது, சுத்தமான காற்றுக்கு ஆக்ஸிஜன் செண்டருக்கு அலைந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம், துருவப்பணி பாறைகளெல்லாம் உருகி கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.நெகிழியைப் பயன்படுத்தி பற்பல நோய்களோடு இலவசமாக இணைந்திருக்கிறோம். இயற்கையைக் காக்க தவறியிருக்கிறோம். இனி மேலும் விழித்துக் கொள்ளா விட்டால் அடுத்த தலைமுறை தான் என்னவாகுவது?.
பருவகால மாற்றத்திற்கு 99 சதவீதம் மனிதச் செயல்பாடுகள் தான் என்று ஆணித்தரமாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பசுமைப் புரட்சி தொடங்கி ஒரு பக்கம் தன்னிறைவைப் பெற்றுத் தந்தாலும் மறுபக்கம் சுற்றுச்சூழலில் மாசுக்களை உற்பத்தி செய்திருக்கின்றன. கரியமில வாயுக்கள் அதிகமாக கலப்பதினால் தான் வளிமண்டலம் வெப்பமாகியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் கடலில் பவளப்பாறைகள் முதற்கொண்டு அழிந்திருக்கின்றன. கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.
பிரிட்டீஸ் அண்டார்டிக் சர்வே நிறுவனம் ஆய்வு நடத்தியதில் காற்றில் கார்பன் - டை -ஆக்சைடு அளவு உயரும் போது அண்டார்டிக் கடல் பகுதியில் 6 டிகிரி அளவுக்கு கூடுதலாக பனிக்கட்டிகள் உருகுவது தெரிய வந்துள்ளது. இதனால் கடல்நீரின் மட்டம் 6 மீட்டர் உயரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு கடல் நீர் அளவு உயரும் போது கடற்கரை நகரங்களான லண்டன், நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்-கோ உள்ளிட்ட நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது.
சர்வதேச அரசியல் நாடகம்
உலக வெப்பமாயதலில் வளர்ந்த நாடுகளின் பங்கு தான் அதிகமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் உலக மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆனால் உலகை மாசுபடுத்துவதில் அவர்களின் பங்கு 50 சதவீதமாக இருக்கிறது. பெருமளவு கரியமில வாயுக்களை அவர்களது தொழிற்சாலைகளே உமிழ்கின்றன. உலகம் வெப்பமாகுவதைத் தடுக்க வளர்ந்த நாடுகள் கிளீன் நுட்பத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதில் சர்வதேச அரசியல் அரங்கேறுகிறது. சுற்றுச்சூழல் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் வளர்ந்த நாடுகள் தனது உற்பத்தி பாதித்து பொருளாதாரம் பாதிக்கும் என்பதால் அவ்வொப்பந்தைகளைப் பெயரளவில் வைத்துக் கொள்கிறார்கள்.
மாற்று வழி தேவை
உலகம் வெப்பமயமாதலில் தொழிற்சாலை, வாகனப்புகை தான் அதிக பங்கு வகிக்கிறது. அவைகளிலிருந்து வெளிவரும் வாயுக்களே வெப்பத்தை அதிகரிக்கின்றன. வெளியேறும் வாயுக்களைக் கட்டுப்படுத்தவும், வடிகட்டவும் புதிய தொழில்நுட்பங்கள் கண்டறியலாம். இயற்கை விவசாயம், தொழில் நுட்பங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். கார்பன் மோனாக்சைடை உறிஞ்சிக் கொள்ளும் கேரட் வகைகளை அதிகமாக பயிரடலாம். ஜெர்மனியில் நடைமுறையில் இருக்கும் வாயு குளிர்விப்பான் குளங்களை நாமும் அமைக்கலாம்.
நெகிழி எனும் அரக்கன்
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் நெகிழியின் சராசரி பயன்பாட்டு நேரம் வெறும் 12 நிமிடங்கள். ஆனால் அதன் வாழ்நாள் 1000 ஆண்டுகள் என்பதை பிரமிக்க வைக்கிறது, அவைகளைப் பயன்படுத்தினாலும் தீங்கு எரித்தாலும் தீங்கு. சுவாசக் கோளாறு, உணவு மண்டல பாதிப்பு, ஒவ்வாமை இவ்வாறாக புற்றுநோய் வரை இவை தோற்றுவிக்கும் நோய்கள் ஏராளம்.நெகிழியை மக்களாகிய நாம் பயன்படுத்துவதை அறவே நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக துணிப்பைகளைப் பயன்படுத்தலாம். நெகிழி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடி விட்டு அதற்கு மாற்றான வேறு தொழில்களில் அவர்களை ஈடுபடுத்துவது அரசின் கடமை.

No comments:
Post a Comment